நதாஷாவின் வீடியோவை வெளியிட்ட யூடியூப் சனல் உரிமையாளருக்கு வி.மறியல்

'SL VLOG' எனும் யூடியூப் சனலின் உரிமையாளரான புருனோ திவாகர என்பவருக்கு, எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை பேச்சாளர் நதாஷா எதிரிசூரியவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் கொண்ட வீடியோவை வெளியிட்டமை தொடர்பில் குறித்த நபர் நேற்று (31) கைது செய்யப்பட்டிருந்தார்.

நகைச்சுவை பேச்சாளர் நதாஷா எதிரிசூரியவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (31) மாலை 'SL VLOG' உரிமையாளரைக் கைது செய்தது.

சந்தேகநபர் இன்றையதினம் (01) கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோக்களைள பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களில் வைரலான குறித்த வீடியோவை ஆரம்பத்தில் 'SL VLOG' எனும் யூடியூப் சனலில் வெளியிடப்பட்டதால், புருனோ திவாகர நேற்றையதினம் வாக்குமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற நகைச்சுவை பேச்சு (stand-up comedy) நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பில் நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்கு ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...