சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக கைதான நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை

- கோட்டை நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்றத்தினால் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இவ்த்தரவை வழங்கியுள்ளார்.

குறித்த மனு விசாரணையை எடுத்துக் கொண்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்ததையடுத்து, அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மே 27ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரிய குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் எடுக்கப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஜூலை 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அவரது பிணைக் கோரிக்கை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

சம்பவம் தொடர்பில் அவரது கருத்துகள் அடங்கிய குறித்த வீடியோவை வெளியிட்டதாக கைதான 'SL VLOG' எனும் யூடியூப் சனலின் உரிமையாளரான புருனோ திவாகர கடந்த ஜூன் மாதம் வழக்குத் தவணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகேவினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...