மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பு

தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் முற்றாக  பாதிக்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம்  தெரிவித்துள்ளது.

இன்று (05) காலை நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற 1520 எனும் புகையிரதம் வட்டகொடை பகுதியில் தடம் புரண்டுள்ளதுடன், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மரங்கள், தொலைபேசி கம்பங்கள் மற்றும் மண்மேடுகள் என்பன புகையிரத வீதியில் வீழ்ந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத என்ஜின் பகுதி தடம் புரண்டுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக புகையிரத  போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள பெரும் சிரமங்களுக்கு மத்தியில் புகையிரத வீதியை சீர்செய்யும் பணியில் புகையிரத ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம்  குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக மலையக புகையிரதப் பயணிகள் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருவதாகக் காணக்கூடியதாக இருந்தது.

தலவாக்கலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...