ரஷ்ய தலைநகரில் ஆளில்லா விமான தாக்குதலால் பதற்றம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் வ்னுகோவோ சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானங்களை திருப்பி அனுப்ப வேண்டி ஏற்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு அவை தலைநகரின் பரந்த பகுதிகளை இலக்கு வைத்ததாக கூறப்படுகிறது. எனினும் அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட வனுகோவோ விமானநிலையம் மொஸ்கோவில் உள்ள மூன்று சர்வதேச விமானநிலையங்களில் ஒன்றாகும். அங்கு துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்தில் இருந்து வந்த விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன. மொஸ்கோவை இலக்கு வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த மே மாதம் எட்டு ஆளில்லா விமானத் தாக்குதல்களில் சிறு சேதங்கள் ஏற்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

அது 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட முதல் ஆளில்லா விமானத் தாக்குதலாக இருந்தது. எனினும் உக்ரைன் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்திருந்தது.


Add new comment

Or log in with...