ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெற்றார் அத்தபத்து

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

33 வயதான சாமரி அத்தபத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (03) நடைபெற்ற தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் இலங்கை அணிக்கு 29 ஓவர்களில் 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப வீராங்கனையாக வந்த சாமரி அத்தபத்து 80 பந்துகளில் ஆட்டமிழக்காது 140 ஓட்டங்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் அவர் 758 புள்ளிகளுடன் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இதன்போது அவர் முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி, இரண்டாவது இடத்தில் இருந்த தென்னாபிரிக்க வீராங்கனை லோரா வோல்வார்ட் உட்பட முதல் ஆறு இடங்களில் இருந்த வீராங்கனைகளை முந்தியுள்ளார்.

அதேபோன்று துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் முதல் இடத்தைப் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இலங்கை ஆடவர் ஒருநாள் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் இருவர் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான உதேஷிகா பிரபோதனி (டி20 பந்துவீச்சு) மற்றும் ஷஷிகலா சிறிவர்தன (டி20 சகலதுறை ஆட்டம்) ஆகியோர் 2014 இல் முதலிடத்திற்கு முன்னேறி இருந்தனர்.

சாமரி தவிர, துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் கவிஷா டில்ஷாரி 37 ஆவது இடத்தில் இருந்து 19 ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு பந்துவீச்சாளர்களில் பிரபோதனி 32 ஆவது இடத்தில் இருந்து 14 ஆவது இடத்திற்கு உயர்வு பெற்றார்.

இதுவரை 95 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள சாமரி அத்தபத்து 8 சதங்கள் மற்றும் 15 அரைச் சதங்களுடன் 3,199 ஓட்டங்களை பெற்றுள்ளார்.


Add new comment

Or log in with...