இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

புதிய விநியோகஸ்தர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில்

தடையின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், இரு சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அதன் மூலமான விநியோக செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவித்த அமைச்சர், அந்த நிறுவனங்களின் முதலாவது எரிபொருள் கப்பல் இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும்போதே, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர், நிதி நெருக்கடியிலிருந்த மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின்  நிதி நிலைமைகள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தையடுத்து, ஸ்திரமடைந்துள்ளது கடந்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் பலனாக இல்லாமல் செய்ய முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போது அனைத்து மின்சார விநியோகஸ்தர்களுக்குமான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. மீள்புதுப்பிக்கத்க்க மின் சக்தி வேலைத்திட்டங்களை புதிதாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் செப்டம்பர் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வந்தது.

இதன்படி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் கப்பல் நாட்டுக்கு வந்த பின்னர் சிபெட்கோ என்ற பெயரில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்காலத்தில் அவர்களது நிறுவனத்தின் பெயரிலேயே விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...