கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (03) பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் நலம் விசாரித்து, அவருடன் கலந்துரையாடினார். 

கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹராவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு பெரஹராவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கந்துல ஹஸ்தி ராஜாவின் மீது தாது கலசத்தை ஸ்தாபித்தார்.

அதன் பின்னர் இறுதி பெரஹராவை பார்வையிட்ட ஜனாதிபதி, கதிர்காமம் சமன் தேவாலயத்துக்கும் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹராவை பார்வையிட விகாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கதிர்காமம் மகா தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே, இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹரன்போல்(Poj Harnpol), கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்க்ஷ, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 


Add new comment

Or log in with...