களஞ்சிய அறையில் வைத்திருந்த ஹெரோயின் பொதிகள் மாயம்

பிஸ்கால் அதிகாரிகள் கைது

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற களஞ்சிய அறையில் வழக்குக்கு தேவையான சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளை திருடிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இரண்டு பிஸ்கால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரொருவரிடமிருந்து போதைப்பொருள் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சில காகிதங்கள்  கண்டுபிடிக்கப்பட்டு, அவை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. மஜிஸ்திரேட் முன்னிலையில் அழிப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பன்னிப்பிட்டிய, தெபானம மிகுந்து மாவத்தையில் வசிக்கும் 27 மற்றும் 37 வயதுடையவர்களென இனங்காணப்பட்டனர்.

போதைப்பொருள் களஞ்சியத்தின் பொறுப்பாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் இருவரும் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சுஜித் பிரசன்னவின் ஆலோசனைக்கமைய, குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் ரத்னகுமாரின் வழிகாட்டலில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 


Add new comment

Or log in with...