யாழ். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே இங்கு வந்துள்ளேன்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

"நாம் அனைவரும் இந்தியா போன்ற நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இனம், மதம், மொழி என்ற வேற்றுமைகளை களைந்து இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இனங்களுக்கிடையே சகோதரத்துவம் வளர வேண்டுமென்பதே  எமது நோக்கமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாண மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து, அவை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புடனே தான் யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடைய அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு நேற்று (29) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இந்துமத குருமார்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

"இந்தியாவில் பல மதங்கள், பல மொழிகள், பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும், அவர்கள் இந்தியர்களாக ஒன்றிணைந்து நிற்கின்றனர். அவர்கள் மதங்களை முன்னிலைப்படுத்துவதில்லை. நாமும் மதம், மொழி போன்ற வேற்றுமைகளை முன்னிலைப்படுத்தாமல், இலங்கையர் என்ற அடிப்படையில் ஒரே குடும்பமாக வாழ வேண்டும்" என்றார்.

"நான் ஜனாதிபதியாக இருந்த போது, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகளுக்காக ஜனாதிபதி செயலணியை உருவாக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி, அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியிருந்தேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

சாவகச்சேரி விசேட நிருபர்


Add new comment

Or log in with...