நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு குற்றச்சாட்டு; ரிஷாத் MPக்கு ஜூலை 21வரை அவகாசம்

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை அலட்சியம் செய்த குற்றம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் தொடர்புடைய எதிர் மனுவை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

வில்பத்து வனப்பகுதிக்கு அருகாமையிலுள்ள மறிச்சுக்கட்டி மற்றும் கரடிக்குழி வனப்பகுதியில் சுத்திகரிப்பு செய்துள்ள சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக அதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேற்படி மனு மீதான விசாரணை நேற்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதன்போது, அவரது சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.

அதன்போது, மேற்படி மனுவுடன் தொடர்புடைய எதிர்ப்பை தாக்கல் செய்வதற்கு காலஅவசாகம் பெற்றுத்தருமாறு அவர், நீதிபதிகள் குழாமிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், குறித்த எதிர்ப்பை சமர்ப்பிப்பதற்கு காலஅவகாசம் வழங்கியுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதிக்குள் அதனை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...