தமிழ் இலக்கிய உலகில் ஆற்றல்மிகு இலக்கியப் படைப்பாளி முருகையன்

அன்னாரின் 14 ஆவது நினைவு தினம் இன்று (ஜூன் 27)

கவிஞர் இ. முருகையன் எமது காலத்தில் ஆற்றல் மிக்க படைப்பாளியாக விளங்கியவராவார். அவரது படைப்புகள் நவீன தமிழ்க் கவிதை உலகில் நிலைத்திருக்கின்றன. இ.முருகையன் 27.06.2009 அன்று தமது 74 ஆவது வயதில் காலமானார். அவரது கவிதைகளும், நாடகங்களும் என்றும் நிலைத்து நிற்கும் வரலாற்று ஆவணங்களாகின்றன.

ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான இ. முருகையன் யாழ் தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் ஏப்ரல் 23, 1935 இல் பிறந்தவர். அவர் தமிழ் அறிஞராகவும், திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். யாழ். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார்.

அவர் 1950 முதல் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றின் சிறந்த படைப்பாளியுமாவார்.

இதன் பின்னர்1961 ஆம் ஆண்டில் லண்டனில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். யாழ் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி கலாநிதி பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்கள் முதலியவற்றையும் எழுதியுள்ளார்.

அத்துடன் திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டார். 1964_ -1965 காலப்பகுதியில் வெளிவந்த 'நோக்கு' என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கி பின், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ் மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலை சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார்.

அறிவாயுதமாகவும், அரசியல் ஆயுதமாகவும், வர்த்தகத் தொழில் நுட்ப ஆயுதமாகவும் மொழி பயன்பட வேண்டும். அப்பொழுது தான் அந்த மொழி முன்னேறிய மொழியாகும், என்று தன் வாழ்வையே தமிழ் இலக்கியத்துக்காக பதிவு செய்த முருகையனுக்கு அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய ரத்னா விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முருகையன் எழுதிய ஒருவரம், நெடும்பகல், அது-அவர்கள், மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர், ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும், ஆதிபகவன் ஆகிய கவிதைநூல்கள் முக்கியத்துவம் பெற்ற படைப்புகளாகும்.

இவர் எழுதிய, ‘மொழிபெயர்ப்பு நுட்பம் - ஓர் அறிமுகம்’ என்னும் நூல் மொழிபெயர்ப்பின் தேவையானது நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் மிகவும் அவசியமானது ஆகும்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா...


Add new comment

Or log in with...