நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவுவதால் மக்கள் மத்தியில் மிகுந்த அவதானம் தேவை!

வயல்சார்ந்த பிரதேசங்களில் நடமாடுவோருக்கு ஆபத்து அதிகம்!

இலங்கை புவிமத்தியரேகை கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள நாடான போதிலும், இந்நாட்டில் சில நோய்கள் வருடம் முழுவதும் பதிவாகக் கூடியனவாக உள்ளன. அந்த நோய்களில் லெப்டோஸ்பைரோசிஸ் (leptospirosis) என்ற எலிக்காய்ச்சலும் ஒன்றாகும். இந்நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதல் இந்நோய் பதிவாகி வருகிறது.

இலங்கை ஒரு விவசாய நாடாக இருப்பதால் வேளாண்மைச் செய்கை இடம்பெறும் பிரதேசங்களில் இந்நோய்க்கு உள்ளாகின்றவர்கள் அதிகம். அத்தோடு சுரங்கத் தொழில் இடம்பெறும் பகுதிகளிலும் இந்நோயை அவதானிக்க முடியும். அதன் விளைவாக இது வயல் காய்ச்சல், எலிக்காய்ச்சல், சுரங்கக் காய்ச்சல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய நோயான போதிலும் மொனராகலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களில்தான் எலிக்காய்ச்சலின் அச்சுறுத்தல் மிக அதிகமாகும்.

குறிப்பாக மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியிலும் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். ஏனெனில் இது சிறுபோகம் மற்றும் பெரும்போக வேளாண்மைச் செய்கை இடம்பெறும் காலப்பகுதியாகும். அதேநேரம் மழைக்காலநிலை நிலவும் போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் இந்நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

அந்த வகையில் இந்நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 6000_- 7000 பேரளவில் இந்நோய்க்கு உள்ளாகின்றனர். அவர்களில் 80_ -120 இடைப்பட்ட எண்ணிக்கையானோர் உயிரிழக்கின்றனர். இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் சுமார் 3000 பேர் இந்நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்நாட்டில் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எலிக்காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்களுக்கென விஷேட கருத்தரங்கொன்றை இலங்கை மருத்துவர்கள் சங்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அக்கருத்தரங்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் பண்டுக்க கருணாநாயக்க, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவின் மருத்துவ நிபுணர் டொக்டர் துஷாரி தபரேரா, மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் எலிக்காய்ச்சல் தொடர்பான விஷேட ஆராய்ச்சிப் பிரிவின் நுண்ணுயிரியல் தொடர்பான விஷேட ஆராய்ச்சி மருத்துவர் லிலானி கருணாரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இந்நோய் குறித்து தெளிவுபடுத்தினர்.

குறிப்பாக எலிக்காய்ச்சலை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள முடியும். இந்நோய்க்கு உள்ளானால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே இனம்கண்டு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும் போது முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதை இம்மருத்துவ நிபுணர்கள் உறுதிபட எடுத்துக் கூறினர்.

இக்காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படத் தவறுவதன் விளைவாகவே எலிக்காய்ச்சல் தீவிரநிலையை அடைவதாகவும் உயிராபத்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அம்மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நோய்க்கு லெப்டோஸ்பைரோஸிஸ் என்கிற பக்றீரியா காரணியாக இருக்கிறது. அது எலி, நாய், பூனை போன்ற வீட்டு வளர்ப்புப் பிராணிகளில் காணப்படக்கூடியதாகும். இந்நாட்டில் இந்நோயின் பரவுதலுக்கு எலிகள்தான் அதிகம் பங்களிக்கின்றன. இது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மை என்று தொற்று நோயியல் தடுப்புப் பிரிவின் மருத்தவ நிபுணர் டொக்டர் துஷாரி தபரேரா தெரிவித்துள்ளார்.

எலிகளின் உடல் பாகங்களில் காணப்படக் கூடிய இப்பக்றீரியா அதன் சிறுநீர் மூலம் வெளிப்படும். அது நீருடன் கூடிய சேறுசகதி மிக்க வயல்வெளிகள், கால்வாய்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் தங்கி இருக்கும். இவ்வாறான பிரதேசங்களில் கை, கால்களில் சிராய்ப்புக் காயங்கள், வெட்டுக்காயங்கள், காலில் வெடிப்புகள் மற்றும் பூஞ்சை தொற்றுக்கு உள்ளானவர்கள் போன்றோருக்கும் வயல் மற்றும் கால்வாய் நீரில் வாய் கொப்பளிப்பவர்கள், முகம் கழுவுபவர்கள் போன்றோருக்கும் இத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும். குறிப்பாக தோலில் காணப்படும் காயங்கள், வெடிப்புக்கள் ஊடாகவும் கண், மூக்கு, வாய் ஊடாகவும் ஒருவரின் உடலுக்குள் இப்பக்றீரியா சென்றடைய முடியும்.

அதனால் வயல் மற்றும் சேறு சகதி மிக்க பிரதேசங்களில் வேலை செய்பவர்களும் நடமாடுபவர்களும் விளையாடுபவர்களும் எலிக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது இன்றியமையாததாகும்.

நோய் அறிகுறி:

ஒருவருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால் கடும் காய்ச்சல், கடும் உடல் வலி, உணவில் விருப்பமின்மை, தலைவலி, வாந்தி போன்றவாறான அறிகுறிகள் முக்கியமாக வெளிப்படும். அதேநேரம் 'சிலருக்கு கண்கள் மஞ்சளடையலாம் அல்லது சிவப்பு நிறமாக மாற்றமடையலாம். ஆனால் கண்களில் இவ்விதமான அறிகுறிகள் வெளிப்படாவிட்டால் அது எலிக்காய்ச்சல் அல்ல என்ற முடிவுக்கு வரலாகாது. இவ்விதமான அறிகுறி ஒரு சிலருக்கே வெளிப்படும்' என்று குறிப்பிட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடப் பேராசிரியர் பண்டுக்க கருணாநாயக்க, 'எலிக்காய்ச்சலின் பிரதான அறிகுறியே காய்ச்சல்தான்' என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் இந்நோயின் விளைவாக உடலின் அவயவங்கள் வெவ்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். குறிப்பாக சிறுநீரகம் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது சிறுநீர் வெளியேறுதல் குறைவடையலாம். முகம் வீக்கமடையும், மூச்செடுப்பதில் சிரமம் கூட ஏற்படலாம்.

மேலும் மூளையில் நெருக்கடி ஏற்படுமாயின் அதிக தலைவலி ஏற்படுவதோடு சிந்திக்கும் திறனும் கூட குறைவடையலாம். எலிக்காய்ச்சலின் விளைவாக இருதயத்திலும் தாக்கங்கள் ஏற்படலாம். அது மயோகாடைடிஸ் நெருக்கடியாக அமைவதோடு மூச்செடுப்பதிலும் சிரமம் ஏற்படும். நாடித் துடிப்பிலும் நெருக்கடிகள் ஏற்படலாம்.

இவை இவ்வாறிருக்க, கடந்த சில வருடங்களாக இந்நோய்க்கு உள்ளாகின்ற சிலர் மத்தியில் நுரையீரலில் தாக்கம் ஏற்பட்டு குருதிக்கசிவும் அவதானிக்கப்படுகின்றது. அதனால் உடலுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்கப்பெறாததன் விளைவாகவும் மூச்செடுப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான அறிகுறிகள் உயிராபத்தை ஏற்படுத்தலாம். இவ்வறிகுறிகள் எலிக்காய்ச்சல் மிகவும் பயங்கரமான நோய் என்பதைத் எடுத்துக் காட்டுகின்றன.

அதனால் இந்நோய்க்கு உள்ளாகின்றவர்கள் விரைவாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்வது மிகவும் முக்கியமானது. அதன் ஊடாக உயிராபத்து அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆரம்ப கட்டத்திலேயே நோயை சரியான முறைப்படி அடையாளம் கண்டு உரிய சிகிச்சை பெற்றுகொள்ளும் போதும் நோயை முழுயாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதற்குத் தேவையான சிகிச்சை முறைகள் உள்ளன.

நோயை தவிர்த்துக் கொள்ளுதல்:

'அதனால் இந்நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தற்போது காய்ச்சலைப் பிரதான அறிகுறியாகக் கொண்ட பல நோய்கள் நாட்டில் காணப்படுவதால் எலிக்காய்ச்சல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள நுண்ணுயிரியல் தொடர்பான விஷேட ஆராய்ச்சி மருத்துவர் லிலானி கருணாரட்ன, இது திடீரென தோற்றம் பெற்று தீவிரமடையக்கூடிய இயல்பைக் கொண்டதொரு நோய் என்பதை மறந்துவிடலாகாது' என்றும் அவர் கூறினார்.

அதனால் இந்நோய் அச்சுறுத்தல் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களின் விவசாயிகளுக்கு நோய் குறித்து அறிவூட்டி பொதுச்சுகாதார அதிகாரியின் அறிவுரைகளுடன் நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இம்மாத்திரைகளை பிரதேச மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும். உடலில் கீறல் காயங்கள், காலில் வெடிப்பு கொண்டிருப்பவர்கள் அவற்றை நன்கு மறைத்துக் கொண்டு வயல் மற்றும் சேறுசகதி மிக்க பிரதேசங்களில் நடமாடவோ வேலைகளில் ஈடுபடவோ வேண்டும்.

ஆகவே எலிக்காய்ச்சலின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.

மர்லின் மரிக்கார் ...


Add new comment

Or log in with...