உருகி உருகி ஒளியூட்டும் சேவைக்கு...

(சர்வதேச தாதியர் தின (இன்று) கவிதை)

அகிலத்தின் அச்சாணி

ஆரோக்கியம் அதில்

தாதியத்தின் முக்கியம்

நாமடைந்த பாக்கியம்

நம் நாடடைந்த

நல் சுகாதாரச் சுட்டெண்கள்

தாதியர் பெற்ற

வெற்றிக் கிண்ணங்கள்

 

இச் செளபாக்கிய சுவர்க்க தீவின்

சுகதேகி பிரஜைகளை

சிருஷ்டிக்கும் சிற்பிகளாய்

"நைட்டிங்கேல்" வாரிசுகள்

தேசத்தை நேசிக்கும்

தாதிய தேவதைகளின்

வலுவான சேவைகள் அவை

ஏக இறைவன் ஜீவன பரிசுகள்

 

அவர்கள் நடுநிசியில் விழித்திருப்பதால்

நண்பகலிலும் உறங்க முடிகிறது எங்களுக்கு

சாதி பேதமில்லாது மக்களுக்கு

கொதிக்காமல் இன்முகத்துடன்

கனிவோடு பணியாற்றுவதால்

அகச் சுரப்பிகள்

அளவோடு சுரக்கின்றன

எம் கண்களும் பனிக்கின்றன

 

பல பொழுதுகள் நா வறண்டு

பசி கண்டும் செவிலியர்

முகம் சுழிக்காமல்

பணிவுடன் பணி தொடர்வதினால்

பிணியாளர் உணவுக்கால்வாய் ஈரமாகயிருக்கிறது

 

விபரமாய் விரைவாக

விரல்கள் அசைவதால் தானே

அவசர சிகிச்சையிலும்

சுவாச அசைவு சீராகயிருக்கிறது

நீங்கள் குனிந்து குனிந்து

சரீரம் தொட்டவுடன்

பூதவுடல் கூட சட்டென்று

கெட்டியாக எழும்பி நடக்கிறது

 

மடிந்து போவென்று

கடிந்து பேசி கல்லாக நிற்காமல்

துடிப்பாக சுழல்வதால் தானே

மரணப்படுக்கையிலும்

இதயத் துடிப்பு நிற்காமல்

இன்னும் அடிக்கிறது

இடர் சமயம் அமையும்

எதையும் செய்யும்

ஊதியம் ஈடுசெய்யா தாதியம்

இமயம் அவர் இதயம்

 

கைபிடித்து கைகொடுத்து

தூக்கிவிடும் வேண்டுகோள்கள்

அனைத்தும் நிறைவேற்றும்

கருணையுள்ளமுள்ள தாதியர்

நலிவுற்றவர் வாழ்வின்

ஆதர்ச ஊன்றுகோல்கள்

 

தேவலோகத்தின் தேவதைகள்

தெய்வீகச் சேவையில்

செவ்வனே செய்யும்

செப்பமான செவிலியர்

முடிவிலிப் பணியில்

தம் உயிரை பணயம் வைத்த பயணம்

ஓட்டமும் நடையுமாய்

இளைப்பாறும் வரை

மெழுகுவர்த்தி உருகி உருகி

ஒளியூட்டும் சேவைக்கு ஏது கரை

 

தரமான தன்னிகரற்ற சேவை

தாராளமாய் தரணியெங்கும்

நோயாளர் பாதுகாப்பு அரண் எழுப்பி

காத்திடும் காவலர்கள்

முற்றிய தொற்றா நோய்கள்

முற்றிலும் ஓடியோழியட்டும்

உயிர் கொல்லி தொற்று நோய்களும்

தோற்றே போகட்டும்

 

நோவிலும் சாவிலும்

ஆத்மாவின் காயங்களை வருடும்

புனித தேவர்கள் அவர்கள்

மருத்துவத்தின் மையப்புள்ளி

பாராட்டுவோம் பாரெங்கும்

செவிலியர் பெயர் சொல்லி

உம் புகழ் பார் கடந்தும்

சதா ஓங்கி ஒலிக்கட்டும்

 

மருத்துவர் அஸாத் எம். ஹனிபா வைத்திய அத்தியட்சகர்


Add new comment

Or log in with...