உடல் பருமனால் புற்றுநோய் ஏற்படுமா?

இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாகும். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது.

நல்ல வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். ஆனால், வசதி, வாய்ப்பில்லாத பலர் இறுதிக் கட்டத்தில் நோயை கண்டறிந்து மரணத்தைத் தழுவுகின்றனர். இந்நிலையில், 'புகைப்பிடித்தலை விட உடல் பருமன்தான் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது' என்று சமீபத்திய ஆய்வொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ நிறுவனமொன்று பல ஆண்டுகளாக புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பால் புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை உலகுக்குத் தெரிவித்ததும் இந்த நிறுவனம்தான்.

குடல், சிறுநீரகம், ஈரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமன் தான் என்று உறுதிபடக் குறிப்பிட்டிருக்கிறது இந்நிறுவனம். இந்த வகையில் உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள அளவுக்கு 'உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாதுள்ளன என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என்றாலும் உடல் பருமன் உடைய எல்லோருக்கும் புற்றுநோய் ஏற்படாது. ஆனாலும் உடல் பருமன் அதிகரிக்கும்போது அது தொடர்பில் மருத்துவ ஆலோசனையுடன் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் அபிப்பிராயமாகும்.


Add new comment

Or log in with...