359 புறாக்களை வைத்திருந்த இருவர் கைது

புத்தளம் கருவலகஸ்வெவ  தப்போவ சரணாலயத்திற்கு அருகில் புறாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 359 புறாக்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு சட்டத்தின் கீழ், சரணாலயத்திற்கு அருகிலிருந்து வளர்ப்புப் புறாக்களை விடுவிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி புறாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி அக்குறணை மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தளம் தப்போவ சரணாலயப் பகுதியில் குறித்த புறாக்களை பந்தயப் போட்டிக்காக விடுவிக்கும் நோக்கில், கண்டி அக்குறணை பகுதியிலிருந்து பாதுகாப்பான முறையில் 11 பெட்டிகளில் அடைக்கப்பட்டு லொறி ஒன்றில் அவை கொண்டுவரப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்த கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மீட்கப்பட்ட புறாக்கள் அனைத்தும் நேற்று (30) மாலை விடுவித்தனர்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...