மின்சார தடை காரணமாக நீர் விநியோகம் பாதிப்பு; போக்குவரத்து நெரிசல்

மின்சார தடை காரணமாக நீர் விநியோகம் பாதிப்பு-Island Wide Power Failure-Water Supply Disrupted-Traffic Congestion Reported-Dullas Alahapperuma

- சமிக்ஞை விளக்குகள் ஒளிராமையால் போக்குவரத்து நெரிசல்
- நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மேலும் சில மணித்தியாலங்கள்
- சம்பவம் தொடர்பில் ஆராய குழு நியமனம்

நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக, ஒரு சில இடங்களில் நீர் விநியோகம் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, மின்சாரத் தடை காரணமாக வீதி சமிக்ஞை விளக்கு ஒளிராமையால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) பிற்பகல் அளவில் கெரவலபிட்டி, உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் முற்றாக மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு மணித்தியாலங்களுக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்சக்தி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்திருந்தார்.

ஆயினும் நிலைமையை சீர் செய்ய தற்போது மேலும் சில மணித்தியாலங்கள் எடுக்கலாம் என, அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அளகப்பெரும, இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...