ஜப்பானின் இலகு ரயில் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

- வடமாகாணத்தில் சுகாதார சேவைகளைப் பலப்படுத்த நெதர்லாந்திடம் கடன்
- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 7 முடிவுகள்

1. ஜப்பான் அரசின் உதவியுடன் உத்தேச இலகு புகையிரத போக்குவரத்துக் (LRT) கருத்திட்டம்
முன்மொழியப்பட்டுள்ள இலகு புகையிரத போக்குவரத்துக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் கொழும்பிலுள்ள ஜப்பான் இராஜதந்திர தூதுக்குழுவுடன் கலந்துரையாடலை மீண்டும் முனைவுப்படுத்தி குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குப் பொருத்தமான கால அட்டவணையைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

2. குடியியல் நடவடிக்கை முறை சட்டக் கோவைக்கான திருத்தங்கள் (101ஆம் அத்தியாயம்) ( 205ஆம் பிரிவு)
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தங்கள் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 10.10.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் குடியியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழுவால் குறித்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் சில திருத்தங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

குறித்த திருத்தங்களையும் உள்ளடக்கியவாறு சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதிச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. நெதர்லாந்து நிதியுதவியின் கீழ் வடமாகாணத்தில் சுகாதார சேவைகளைப் பலப்படுத்துதல்
'வடமாகாணத்தில் சுகாதார சேவைகளைப் பலப்படுத்துதல்' கருத்திட்டத்திற்கான கருத்திட்ட செலவின் 75% வீதமான நிதி வசதியளிப்புக்களுக்கு 45 மில்லியன் யூரோ கடனைப் பெற்றுக் கொள்வதற்காக நெதர்லாந்தின் ING Bank N.V உடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஞ்சிய 25% வீதமான கருத்திட்ட செலவு நெதர்லாந்து அரசின்  Invest International Public Programmes B.V இன் மூலம் நன்கொடையாக நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்கருத்திட்டத்தின் 92% வீதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளது.

இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, கடன் தொகையில் 10% வீதத்தைக் குறைத்து, வழங்கப்படுகின்ற நன்கொடையை 35% வீதமாக அதிகரிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்குரிய திருத்தங்களை உள்வாங்கி நெதர்லாந்து அரசின் Invest International Public Programme B.V மற்றும் நெதர்லாந்தின் ING Bank N.V உடன் உடன்பாட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான Mv. Ceylon Breeze மற்றும்  Mv. Ceylon Princess ஆகிய கப்பல்களை உலர் கப்பல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தல்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான காலப்பகுதியில் இவ்விரண்டு கப்பல்களையும் சர்வதேச ரீதியான வாடகைச் சேவையில் அமர்த்துவதற்காக குத்தகை அடிப்படையில் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துபவர்கள் அல்லது வர்த்தக முகாமையாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக, 09 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 06 விலைமுறிகள் வாடகை அடிப்படையிலும், 03 விலைமுறிகள் வர்த்தக முகாமைத்துவத்தின் கீழும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தொழிநுட்ப மதிப்பீட்டுக்குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய நிதி ரீதியாக மிகவும் கவர்ச்சிகரமான சிறந்த விலைக்கோரலைச்  சமர்ப்பித்துள்ள விலைமனுதாரரான M/s Coral Energy DMCC இற்கு மேற்குறிப்பிட்ட கப்பல்கள் இரண்டையும் வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. 2023/24 மற்றும் 2024/25 காலப்பகுதிக்கான கப்பலிலிருந்து லக்விஜய மின்னுற்பத்தி நிலைய இறங்குதுறைக்கு நிலக்கரிப் போக்குவரத்குப் படகுச் (தெப்பம்) சேவைக்கான இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் M/s Shreeji Shipping இற்குமிடையிலான ஒப்பந்தத்தை நீடித்தல்
புத்தளம் துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் கப்பல்களிலிருந்து லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய இறங்குதுறைக்கு 2021/22 மற்றும் 2022/23 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரிப் போக்குவரத்துப் படகுச் சேவை ஒப்பந்தம் இந்தியாவின்  M/s Shreeji Shipping  இற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் நிலக்கரி இறக்கும் பணிகளை தடையின்றி மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில் படகுச் (தெப்பம்) சேவையை ஈடுபடுத்துவதற்காக  M/s Shreeji Shipping மற்றும் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
விசேட வர்த்தப் பண்டவரியை விதிப்பதன் மூலம் கோதுமை மாவு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமையை மீண்டும் தாபிப்பதற்காக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2023 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கம் கொண்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2023 யூன் 14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. சிரேஷ்ட ஆலோசனை சட்டத்தரணிகளுக்கான விசேட கௌரவித்தல் சட்டமூலம்
சட்டத்துறையில் சிரேஷ்ட ஆலோசனை சட்டத்தரணிகளால் பேணிப் பாதுகாக்கின்ற உயரிய தரநியமங்களுடன் கூடிய சிறப்புக்களை பாராட்டுவதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு, 30.01.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிரேஷ்ட ஆலோசனை சட்டத்தரணிகளுக்கான கௌரவித்தல் சட்டமூலம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...