சீரற்ற வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்

- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
- சில இடங்களில் அவ்வப்போது மழை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (05) நாட்டின், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டைமற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...