சாய்ந்தமருது தாக்குதலில் சாட்சியம் மறைப்பு; பொலிஸார் ஒருவர் கைது

சாய்ந்தமருது தாக்குதலில் சாட்சியம் மறைப்பு; பொலிஸார் ஒருவர் கைது-Chief Inspector Arrested Over Conceiling Evidence of Sainthamaruthu Bomb Blast-Apr 26-2020

கடந்த வருடம் ஏப்ரல் 26ஆம் திகதி, சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் (CIP) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை 8.30 மணியளவில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து, கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை பொலிஸ் கராஜின் பொறுப்பதிகாரியாக  குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ்  அவரைக் கைது செய்துள்ளதோடு, அதன் அடிப்படையிலான தடுத்து வைத்து விசாரிக்கும் நடவடிக்கைகளை கொழும்பு குற்றப் பிரிவு மேற்கொண்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமையவே, குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த  நிலையில், சாய்ந்தமருது மக்களின் உதவியுடன், சாய்ந்தமருதில் பதுங்கியிருந்த, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் தந்தை, சகோதாரன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடிந்தது.

குறித்த நபர்கள், கடந்த வருடம் ஏப்ரல் 26ஆம் திகதி, தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...