சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை தாக்குதல்கள்; 15 சடலங்கள் மீட்பு (UPDATE)

நேற்று (26) இரவு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த வீட்டை சோதனை செய்வதற்காக நெருங்கிய வேளையில், குறித்த வீட்டிலிருந்து பொலிசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டினுள் இருந்த தற்கொலை தாக்குதல்தாரிகளினால் குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது வீட்டினுள் தற்கொலை தாக்குதல்தாரிகள் என கருதப்படும் மூவரின் சடலங்களும் பெண்கள் மூவரின் சடலங்களும் ஆறு சிறிய குழந்தைகளின் சடலங்களும் வீட்டிற்கு அருகில் வீட்டிற்கு வெளியே தற்கொலை தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரின் சடலங்கள் உள்ளிட்ட 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் குறித்த வீட்டிற்குள் நுழையும் போது படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரும் குழந்தை ஒன்றையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதோடு நேற்று இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல்தாரிகளின் 4 சடலங்கள் மீட்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு (26) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்களில், தற்கொலைதாரிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காயமடைந்த நிலையிலிருந்து 3 பேரை பொலிசார் வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (26) இரவு சாய்ந்தமருது பிரதேசத்தில், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சாய்ந்தமருது, வொலிவேரியன் வீட்டுத் திட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சம்பவத்தின்போது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சாய்ந்தமருது பிரதேசம் உள்ளடங்கும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் உடனடியாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, தொடர்ந்தும் அது அமுலில் உள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (26) பிற்பகல், சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் -நாவிதன்வௌி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...