ஜனாதிபதி கோட்டாபய அன்று அதிகாரத்தில் இருந்திருந்தால் தாக்குதல் குறித்து சஹ்ரான் நினைத்தும் பார்த்திருக்க முடியாது

சாய்ந்தமருதில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

 

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்திருந்தால் சஹ்ரான் நடத்திய குண்டுத்தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ரிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து சாய்ந்தமருது பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

இங்கு அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில்;  

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தில் சஹ்ரான் எனும் தீவிரவாதி மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் வெகுவாக பாதிப்படைய செய்திருக்கிறது. இதற்குக் காரணம் யார்? இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கடந்த ஆட்சியாளர்கள் தான். அவர்களது பொறுப்பற்ற ஆட்சி நிர்வாகம் தான் சஹ்ரானின் குண்டுத் தாக்குதலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.   அவ்வேளையில் கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்திருந்திருந்தால் குண்டு தயாரிப்பதற்கு சஹ்ரான் பெட்டரியை எடுத்த போதே அந்த சஹ்ரான் தூக்கப்பட்டு, முகவரியில்லாமல் செய்யப்பட்டிருப்பான்.  

இந்த ஆட்சியில் நாம் பங்காளியாக மாறுவதன் மூலமே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையும் முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகளை அடைந்து கொள்ள வேண்டுமாயின் அது, கோட்டாபய அரசாங்கத்தில் தான் சாத்தியப்படும் என்பதையும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். சாய்ந்தமருது மக்களுக்கு தனியான நகர சபை வேண்டுமென்றாலும் பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதன் மூலமே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதன் தவறை உணர்ந்தே பிற்காலத்தில் அதனை ஒதுக்கி வைத்து விட்டு, நுஆ எனும் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். இதன் ஊடாக இனவாதமற்ற அரசியலை முன்னெடுக்கவே அவர் விரும்பியிருந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி, குட்டிகள் போட்டு மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்றெல்லாம் இயங்கி வருகின்றன. இக்கட்சிகள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு விமோசனமளிக்காது.

கல்முனை விசேட நிருபர்  


Add new comment

Or log in with...