கிளைபோசேட் இறக்குமதிக்கு பாராளுமன்றத்தில் அனுமதி

- விவாதமின்றி நிறைவேற்றம்

பெருந்தோட்டத்துறையில் களை நாசினியாகப் பயன்படுத்துவதற்காக கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதம் இன்றி இன்று (06) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒழுங்குவிதி அடங்கிய 2291/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய இந்த வர்த்தமானி மூலம் அனுமதி வழங்கப்படும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட>>

பெருந்தோட்டத்துறையில் களை கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார தாக்கங்களைக் கருத்தில் கொண்டு கிளைபோசேட் இறக்குமதி தடை செய்யப்பட்டாலும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிக்குக் காணப்படும் தடைகள் மற்றும் வெலிகம தென்னோலைகள் பாதிக்கப்படும் நோயை ஒழிப்பது போன்ற காரணங்களுக்காக வரையறுக்கப்பட்ட வகையில் கிளைபோசேட் இறக்குமதி செய்யப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கருத்தில் கொண்டு பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியதால் இது தொடர்பான விவாதத்தை வியாழக்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால் விவாதம் நடத்தப்படுவதன்  அவசியம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸநாயாக மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியதுடன், 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக இன்று நேரம் ஒதுக்கப்பட்டது. புதிய கூட்டத் தொடரில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசயிம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவினால் முன்வைக்கப்பட்ட "இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடையே போசாக்கு குறைபாடு" என்ற தலைப்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை குறித்த விவாதம் பி.ப 5.30 மணிவரை நடைபெற்றது. இதனையடுத்து பாராளுமன்றம் நாளை (07) மு.ப 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...