LTTE யை ஊக்குவிக்கும் இணையம், YouTube; பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது

LTTE யை ஊக்குவிக்கும் இணையம், YouTube; பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது-2 Suspects Arrested By TID for Promoting LTTE Organization

- 5 மடிகணனிகள், 5 கணனிகள் உள்ளிட்ட பொருட்கள் TID கட்டுப்பாட்டில்

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Tubetamil எனும் இணையத்தளம் மற்றும் Tubetamil எனும் YouTube அலைவரிசையின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையிலும், இணைய குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினால் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் வைத்து குறித்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில், குறித்த அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த 35 வயதான பெண் ஒருவரும் 36 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த அலுவலகத்திற்கு குறித்த இருவரும் பொறுப்பானவர்கள் எனும் அடிப்படையில் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், குறித்த அலுவலகத்திலிருந்த 5 மடிகணனிகள், 5 சாதாரண வகை கணனிகள் உள்ளிட்ட மேலும் பல பொருட்களையும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும், கொழும்பிலுள்ள TID அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார்கள் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்  ரோஹண தெரிவித்தார்.


Add new comment

Or log in with...