பயங்கரவாதத்திற்கு துணை; 7 அமைப்புகள், 388 நபர்களின் பெயர் வெளியீடு

பயங்கரவாதத்திற்கு துணை; 7 அமைப்புகள், 388 நபர்களின் பெயர் வெளியீடு-The List of Designated Persons under Regulation 4 (7) of the United Nations Regulation

- பாதுகாப்பு அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி

பயங்கரவாதத்திற்கு துணை புரிந்ததாக தெரிவிக்கப்படும், 7 அமைப்புகள் மற்றும் 388 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானியொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி 25 திகதியிடப்பட்ட குறித்த  வர்த்தமானியினை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய 7 அமைப்புகளே இப்பட்டியில் சேர்க்கப்பட்டுள்ள அமைப்புகளாகும்.

2012ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1758/19 வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, குறித்த பட்டியலில் இவ்வாறு மேலும் 7 அமைப்புகள் மற்றும் 388 தனிநபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டலுவல்கள் அமைசினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கமையவும், 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 1,373 இற்கு பிரகாரம், குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களைப் புரிகின்ற, புரிய எத்தனிக்கின்ற, அதில் பங்கேற்கின்ற, அவற்றை புரிய வசதியளிக்கின்ற என நம்புவதற்கு, தகுதிவாய்ந்த அதிகாரியினால் நியாயமான காரணங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட குழுக்களை, அல்லது தனிநபர்களை இதன் மூலம் பெயரிட முடியும்.

அதற்கமைய குறித்த அமைப்புகளின் அல்லது நபர்களின் இலங்கையிலுள்ள சொத்துக்களை, நிதிகளை முடக்குவதற்கான தீர்மானத்தையும் இதன் மூலம் இலங்கை அரசினால் எடுக்க முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...