ஏப். 21 அறிக்கை, தேசிய பாதுகாப்பு அறிக்கைகளை ஆராய சமல் தலைமையில் குழு

ஏப். 21 அறிக்கை, தேசிய பாதுகாப்பு அறிக்கைகளை ஆராய சமல் தலைமையில் குழு-Committee Appointed to Study PC Reports on Easter Attacks & Parliament Committee Report

- ஜோன்ஸ்டன், கம்மன்பில, ரமேஷ், பிரசன்ன, ரோஹித உறுப்பினர்கள்
- எதிர்வரும் மார்ச் 15 வரை காலக்கெடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதியினால் குழுவொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை  ஆகியவற்றில் அடங்கியுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொர்பாக விரிவாக ஆராய்ந்து அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் அறிக்கையிட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அதற்கமைய குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதி அலுவலகத்தினால் குழுவிடம் வழங்கப்படவுள்ளது.

குழுவின் பணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்)  ஹரிகுப்தா ரோஹணதீர அக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் அறிக்கை 2021 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...