A/L பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு

- கொவிட்-19 தொடர்பான வசதிகளுக்கு பரீட்சை மண்டப மேலதிக பொறுப்பதிகாரி நியமனம்

இம்முறை க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது நேரடியாக www.slexams.com எனும் தளத்திலிருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்குமான பாடசாலை பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், அவர்களது முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் கொவிட்-19 நிலைமையைக் கருத்திற் கொண்டு, பரீட்சை நிலையங்களில் அதிபர்கள் அல்லது பிரதியதிபர்கள் அல்லது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர், பரீட்சை மண்டப மேலதிக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள், பரீட்சை நிலையத்தில் உரிய வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்காக, சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து, அந்நிலையங்களை கிருமியழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவசியமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை, நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

இப்பரீட்சைக்கு தோற்றுவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 362,824 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...