11ஆம் திகதி புலமைப்பரிசில்; 12 முதல் நவ. 06 வரை A/L பரீட்சைகள்

திட்டமிட்டவாறு உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள்

கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் திட்டமிட்டபடி அதே திகதிகளிலேயே நடைபெறுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். எந்தவொரு மாணவருக்கும் பரீட்சை நிலையங்கள் மாற்றப்படாது. உரிய பரீட்சை நிலையங்களில் அவர்கள் பரீட்சைக்குத் தோற்ற முடியும். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் உள்ள மாணவர்களும் பரீட்சைகளில் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், புலமைப்பரில் பரீட்சையும் உயர்தர பரீட்சையும் இரண்டு தடவைகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. அதனால் மீண்டும் இந்தப் பரீட்சைகளை ஒத்திவைக்க நாம் விரும்பவில்லை. பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவது மாணவர்களுக்கு மனரீதியான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசாங்கத்து உணந்துள்ளது. உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய திட்டமிட்டப்படி இந்த இரண்டு பரீட்சைகள் நடைபெறும்.

எதிர்வரும் ஞாற்றுக்கிழமை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. 3,31,000ஆம் மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். 2,936 பரீட்சை மத்திய நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த. உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், 3,62,000ஆம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன், 2,648 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தர பரீட்சைகள் நடைபெறும் ஒரு மத்திய நிலையத்தில் அதிகமாக 160 மாணவர்கள்தான் இருக்கக்கூடும்.

பரீட்சைகள் நடைபெற இந்த எண்ணிக்கையும் குறைவடையும். ஆகவே, அனைத்துக் காரணிகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தியே திட்டமிட்டப்படி பரீட்சை நடத்த தீர்மானித்துள்ளோம். பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறோம். கம்பஹா மாவட்டத்தில் சில விசேட விதிமுறைகளையும் கையாள வேண்டியுள்ளது. கம்பஹா மாவட்டத்திலுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேறு மாவட்டங்களிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு வரும் மாணவர்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மாணவர்கள் அவர்களுக்கு உரிய பரீட்சை மத்திய நிலையங்களிலேயே பரீட்சைகளில் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து கம்பஹா மாவட்டத்திற்கு வருபவர்களும் அவர்களுக்கு உரிய பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும். போக்குவரத்து திணைக்களத்துடன், இணைந்து இதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு விசேட மத்திய நிலையங்களை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து சந்தரப்பங்களிலும் உரிய சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 


Add new comment

Or log in with...