எரிபொருள் பதுக்கல்: இதுவரை 1,387 சுற்றிவளைப்புகள்; 1,321 பேர் கைது

- பெற்றோல் 44,777 லீற்றர்
- டீசல் 155,502 லீற்றர்
- மண்ணெண்ணெய் 20,208 லீற்றர்

சட்டவிரோதமான முறையில் எரிபொருட்களை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல் தொடர்பில் நேற்றையதினம் (09) மேற்கொள்ளப்பட்ட 10 சுற்றிவளைப்புகளில் பெற்றோல் 2,014 லீற்றர், டீசல் 238 லீற்றர், மண்ணெண்ணெய் 20 லீற்றர் மீட்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் இதுவரை 1,387 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 1,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவ்வாறு சட்டவிரோதமாக வைத்திருந்த பெற்றோல் 44,777 லீற்றர், டீசல் 155,502 லீற்றர், மண்ணெண்ணெய் 20,208 லீற்றரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரு லொறிகளில் 18,800 லீற்றர் டீசல் கடத்தல்
இதேவேளை, இன்றையதினம் (10) அம்பாந்தோட்டை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன் ஏற்றிச் செல்லும் லொறி ஒன்று உள்ளிட்ட இரு லொறிகளில் அனுமதிப்பத்திரமின்றி 18,800 லீற்றர் டீசலை போக்குவரத்து செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த லொறிகள் மூலம் அம்பாந்தோட்டை, வெல்லவாய, பெலவத்த ஆகிய பிரதேசங்களுக்கு டீசலை கொண்டு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் 30, 45 வயதான அம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளையதினம் (11) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...