வன்னேரிக்குளம் அபிவிருத்தி செய்யப்படுமா?

கிளிநொச்சியில் இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றே வன்னேரிக்குளம். கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஐந்து பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஏ -9 முறிகண்டியில் இருந்து ஏ -32 பூநகரி - மன்னார் வீதியினை இணைக்கின்ற வீதியின் முறிகண்டியிலிருந்து 12 மைல் தொலைவில் ஐயன்கன் ஆற்றினையும் மண்டகல்லாறு ஆற்றினையும் இரண்டு ஆற்ற அணைகளை கொண்டு இக் குளம் அமைந்துள்ளது.

இக் குளம் முதலில் 1950 ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 1,713 ஏக்கர் அடி நீரைக் கொள்ளக்கூடிய இக் குளமானது 05 சதுரமையில் நீரேந்து பிரதேசத்தையும் கொண்டமைந்துள்ளது. குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் 1954ம் ஆண்டு குடியான்கள் குடியேற்ற திட்டத்தின் கீழ் 03 ஏக்கர் நெற் செய்கைக்கான காணிகளும் 03 ஏக்கர் மேட்டுக் காணிகளும் என்ற அடிப்படையில் 119 பேருக்கு 357 ஏக்கர் காணிகளும் 112 மேட்டுநில உரிமையாளர்களுக்கு 336 ஏக்கர் காணிகளும் வழங்கப்பட்டே வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளத்தின் கீழ் தற்போது 346 ஏக்கர் நிலப்பரப்பில் 115 விவசாயிகள் நெற் செய்கையினை போகப் பயிர் செய்கைகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது இக் குளம் உரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது. இக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிவருவதுடன் இங்கே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத மணல் அகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

யுத்தம் காரணமாக அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரதேசமாக காணப்படும் வன்னேரிக்குளம் கிராமத்தில், யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்றும் பல்வேறுபட்ட தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக நெற் செய்கை காணப்படுகின்றது. அதேநேரம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய ஒரு பிரதேசமாகவும் அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் கானப்படுகின்றது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சரியான நீர் முகாமைத்துவத்தின் மூலம் இவ்வாண்டில் காலபோகம், சிறுபோகம், இடைப்போகம் என்ற மூன்று பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமான அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது 2020/2021இற்கான காலபோக செய்கை மேறகொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தின் நீரேந்து பகுதிக்குள் ஒரு வகையான நீர்த்தாவரம் படர்வதனால் பல்வேறு பாதிப்புக்கள் காணப்படுவதாகவும், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் குளத்தில் உள்ள நீரின் பெரும் பகுதி அதனுடாக வெளியேறி வருகின்றது.

நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்கள் இணைந்து 3000ற்கும் மேற்பட்ட மண்மூடைகளை கொண்டு நீர்வேளியேறுவதை தற்காலிகமாக தடுத்துள்ள போதும் அந்த பகுதியில் மணல் அகழ்வு தொடர்வதனால் குளம் மேலும் பாதிப்புக்களை எதிரிகொள்ளும் அபாயநிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குளங்களுக்கு அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுகளை தடுக்க வேண்டிய தரப்பினர் அதனை தடுப்ப தில்லை என்றும் அதற்கு அவர்கள் துணை நிற்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குளத்தினை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

குளத்தின் அணைக்கட்டின் சேதமடைந்த பகுதிகள் புனரமைப்பு செய்யவேண்டும் என்றும் அத்துடன் குளத்தின் நீரேந்து பகுதியில் வளரும் நீர்த்தாவரங்கள் அகற்றப்பட்டு குளத்தின் உட்பகுதி ஆழப்படுத்தப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த நிலையில் காணப்படுகினற் நீர் விநியோக வாய்க்கால்கள், பாலங்கள், விவசாய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். அதேபோல் வன்னேரிக்குளத்தை சூழவுள்ள பகுதிகளில் காணப்பட்ட உவர் நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில் உவர் ஆக்கிரமிப்பு அதிகரித்து செல்வதாகவும் உவர் நீர் தடுப்பணைகள் புனரமைக்கப்பட்ட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள இந்த வன்னேரிக்குளம் தவிர்ந்த இதனை அண்மித்து திக்காய் குளம், குஞ்சுக்குளம் போன்ற சிறு குளங்கள் உட்பட சிறு நீர்பாசனக் குளங்களை நம்பி இங்கு ஏறத்தாள 1500 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ள ப்படுகின்றது.

இதேவேளை வன்னேரிக்குளத்தின் அபிவிருத்திகளை முன்னெடுத்தாலும் சட்டவிரோத மணல் அகழ்வு தடுக்கப்படவில்லை எனில் அதனால் எந்த பயனையும் விவசாயிகள் அனுபவிக்க முடியாது என்றும் உரிய அதிகாரிகள் மற்றும் சட்டத்தை நிலை நாட்டுபவர்கள் இதனைத் தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சு.பாஸ்கரன்
பரந்தன் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...