பொருளாதார நெருக்கடி: மஹிந்த, பசில், கோட்டாபய எதிரான மனுக்கள் விசாரணைக்கு அனுமதி

- நவம்பர் 30இல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளருக்கு உத்தரவு

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்டோருக்கு எதிரான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை நாணய சபை மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தற்போதைய நாணய சபை உறுப்பினர்களான எஸ்.எஸ்.டபிள்யூ. குமாரசிங்கவும் இம்மனுக்களின் பிரதிவாதிகளாவர்.

இது தொடர்பான  அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (06) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயர் நீதிமன்றம் இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான மனு இன்று (06) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் வீரர் ஜூலியன் போலிங், திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் மஹீம் மெண்டிஸ், இலங்கை சர்வதேச வெளிப்படைத்தன்மை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) உள்ளிட்டோரால் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்கின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவை 203 ஆக பராமரிக்க தவறியமை, நாட்டின் பொருளாதார நிலை உக்கிரமடைந்த நிலையில் சர்வதேச நாணய நிதிய உதவியை நாட தவறியமை, கடந்த ஜனவரியில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக விசாரித்து, அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கணக்காளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு, உயர் நீதிமன்றம் கணக்காய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மற்றும் திருமதி ராணி ஜயமஹா ஆகியோர் பாராளுமன்ற கோப் குழுவில் வழங்கிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அன்றைய தினத்தில் முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் வழங்கிய அறிவுறுத்தல்கள், தொடர்பாடல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த மனுக்களை எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி மீண்டும் எடுப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...