கந்தக்காடு புனர்வாழ்வு பெற்று வந்த நபரின் மரணம்; 4 சார்ஜெண்ட்கள் கைது

- தாக்குதலுக்கு பயன்படுத்திய மின்சாரக் கம்பி; மூங்கில் கம்புகள் மீட்பு
- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
- நீதியமைச்சர் அறிக்கை கோரல் 

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த ஒருவரின் மரணம் தொடர்பில், அங்கு கடமையில் இருந்த 2 இராணுவ சார்ஜெண்ட்கள் மற்றும் 2 விமானப்படை சார்ஜெண்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கடந்த ஜூன் 29ஆம் திகதி குறித்த நபரின் உடலை பொலிஸாரிடம் கையளிக்காமல், குறித்த நிலையத்திலிருந்து வெளியேறிய, அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த நிலையத்தில், சிகிச்சைக்காக வந்த நபரிடம் போதைப்பொருள் காணப்பட்டதாகவும், அதற்காக அவரை கொடூரமாக தாக்கியதனால் அவர் மரணமடைந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 900 இற்கும் அதிகமானோரில் 700 இற்கும் அதிகமானோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக இதன்போது பொலிஸார் அறிவித்திருந்ததோடு, அவர்களில் 679 பேர் மீண்டும் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் பின்னர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 4 சந்தேகநபர்களை நேற்றையதினம் (01) கைது செய்துள்ளனர்.

அதற்கமைய, கோட்டபிட்டிய, நாவலப்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த 35, 36 வயதுடைய 2 விமானப்படை சார்ஜெண்ட்கள் மற்றும் ஹுரிகஸ்வெவ, கல்நேவ பிரதேசங்களைச் சேர்ந்த 37, 39 வயதுடைய 2 இராணுவ சார்ஜெண்ட்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் உதவி உபதேசகர்களாக கடமையாற்றுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மரணமடைந்தவரை தாக்குவதற்கு பயன்படுத்திய கனமான மின்சாரக் கம்பி, மூங்கில் கம்புகள் 2 ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் பிரேதப் பரிசோதனை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெறவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை இன்றையதினம் (02) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்று பின்னர் சரணடைந்ததாக தெரிவிக்கப்படும்  679 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினமும் இவ்வாறு 2 பேர் பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் கந்தக்காடு புனர்வாழ்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 998 பேரில் 272 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், தப்பிச்சென்றோரில் 44 பேர் இதுவரை சரணடையவில்லை எனவும், ஏனையோர் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அங்கிருந்து தப்பிச் சென்ற புனர்வாழ்வு பெறும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071 8591235 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ கோரியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக, அதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...