அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள்

- அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் மற்றும் 2 மேலதிக ஆணையாளர்கள்
- 4 அமைச்சுகளுக்கு செயலாளர்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, நாட்டில் அன்றாட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவும் மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து  பேணுவதற்காகவும் ஜனாதிபதியினால் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம்
குறித்த அதிகாரங்களுக்குகு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் 2மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள பிரதானிகளில் ஒருவரான கே.டி.எஸ். ருவன் சந்திரவும், மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான ரோஹண புஷ்பகுமார, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களினதும் மாவட்ட செயலாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • கே.டி.எஸ். ருவன் சந்திர - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்
  • ரோஹண புஷ்பகுமார - மேலதிக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
  • ரஞ்சித் ஆரியரத்ன - மேலதிக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
  • ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களினதும் மாவட்ட செயலாளர்கள்

4 அமைச்சுகளுக்கு செயலாளர்கள்
இதேவேளை, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான மூன்று செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகிய 4 அமைச்சுகளுக்கு செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (11) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இதுவரை அந்தந்த அமைச்சுகளில் செயலாளர்களாக இருந்தவர்கள் அப்பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  1. ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு
  2. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு -
  3. கே.எம். மஹிந்த சிறிவர்தன - நிதி அமைச்சு
  4. ஜே.ஜே. ரத்னசிறி - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Add new comment

Or log in with...