ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி

ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி-President Issues Extraordinary Gazette notification Banning 11 Muslim organizations Linked to Extremist Activities Under the PTA

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய திகதியிடப்பட்ட (13) குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன் வௌியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளைத் தடை செய்ய சட்ட மாஅதிபர் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். அவை அனைத்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகள் என்பதோடு, ஏனைய மதத்தைச் சேர்ந்த எந்தவொரு அமைப்புகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CTJ, ACTJ, SLTJ உள்ளிட்ட 11 அமைப்புகளை தடை செய்ய அனுமதி-11 Islamic Organization Including SLTJ ACTJ CTJ Connected to Extremist Actitivities

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) எனும் பெயரில் வரும் அனைத்து உப அமைப்புகளின் பெயர்களும் அதில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

  1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
  2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
  3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
  4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
  5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
  6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா
  7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
  8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
  9. அல்கய்தா அமைப்பு
  10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
  11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 27ஆம் பிரிவின் கீழ், 2021 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஒழுங்குவிதிகளுக்கமை குறித்த 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் குறித்த அமைப்புகள் தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளுன் தொடர்புபடுதல், அவற்றில் சம்பந்தப்படுதல், அவ்வாறான சந்தேகத்துக்கு உட்படலாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.

இதேவேளை, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ), சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) ஆகியன, தமது அமைப்புகள் தடைசெய்யப்படுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தன.

தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும், தமது இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தமக்கு ஒரு முறையேனும் வாய்ப்பளிக்கப்படவில்லையெனவும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகுமெனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டிருந்தது.

PDF File: 

Add new comment

Or log in with...