ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணை

ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணை-Indictments Served Rajitha Senaratne and 2 Others
(வைப்பக படம்)

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ம் ஆண்டில் முகத்துவாரம் (மோதறை) மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு விட்ட நடவடிக்கையில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.

குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் ரூ. 1 மில்லியன் கொண்ட தலா ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி உத்தரவிட்டார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுவதற்காக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபையை ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக 05 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, அப்போதைய மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடித்துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ரவீந்திர முனசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...