- பேருவளை, அளுத்கம, பயாகலவில் திங்கள் வரை ஊரடங்கு
- களுத்துறையில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்
கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை, மருதானை (கொழும்பு 09, 10) பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில், மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில், பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமை (26) அதிகாலை 5.00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) முதல் கொழும்பில், மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே 44 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் பல இடங்களிலும் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குலவிட்ட வடக்கு, குலவிட்ட தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில, மாகலந்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment