A/L பரீட்சை திகதி மீள ஆராயப்படும்

A/L பரீட்சை திகதி மீள ஆராயப்படும்-AL Examination Date Will Be Reconsidered-Ministry of Education

ஜூலை 06 பாடசாலை ஆரம்பமான பின் வார இறுதியில் அறிவிக்கப்படும்

இவ்வருடம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை இடம்பெறும் தினம் தொடர்பில் பாடசாலை ஆரம்பித்தவுடன் அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. உயர் தரப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, பாடசாலை நாட்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாததன் காரணமாக, மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு, உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிடம்  கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் இந்த உரிமையை நியாயமானதாக கருதி, இந்த விடயம் குறித்து மேலும் ஆராய்ந்து, தற்போது குறிக்கப்பட்ட செப்டெம்பர் 07 ஆம் திகதி உயர் தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம், மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாதிருப்பதை கருத்திலெடுக்குமாறு, கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும, அறிவுறுத்தியுள்ளார்.

க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்து, பரீட்சை இடம்பெறும் திகதி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இம்முடிவு, எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அவ்வாரத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் எனவும், அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...