ஜூன் 29 முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறப்பு

ஜூன் 29 முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறப்பு-Schools Will Reopen in 4 Stage

ஜூன் 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 29:
முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் ஜூன் 29 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என, கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

ஜூலை 06:
2ஆம் கட்டமாக, தரம் 05, 13, 11 ஐச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பமாகும்.

ஜூலை 20:
3ஆம் கட்டமாக எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்

ஜூலை 27:
4ஆம் கட்டமாக ஜூலை 27 ஆம் திகதி தரம் 3, 4, 6, 7, 8, 9 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

தரம் 01, 02:
தரம் 1 மற்றும் 2 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

பாடசாலை இடம்பெறும் நேரம்:
தரம் 10, 11, 12, 13, மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப் பகுதியில் பாடசாலை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் 03, 04 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கை மு.ப. 7.30 - மு.ப. 11.30 மணி வரையும், தரம் 05 வகுப்புக்கு நண்பகல் மு.ப. 7.30 - நண்பல் 12.00 மணி வரையிலும், தரம் 06, 07, 08, 09ஆம் தரங்களுக்கு வழமை போன்று பிற்பகல் மு.ப. 7.30 - பி.ப. 1.30 மணி வரையும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...