தேள்களை கடத்த முயன்ற சீனருக்கு அபராதம்

தேள்களை கடத்த முயன்ற சீனருக்கு அபராதம்-Chinese National Arrested with 200 Scorpion Fined and Released

அலங்கார வளர்ப்பிற்காக எடுத்துச் செல்ல முயன்றாதாக தெரிவிப்பு

உயிருடன் சுமார் 200 தேள்களை கடத்த முயன்று கைது செய்யப்பட்ட சீன நாட்டவருக்கு ரூபா 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான குறித்த நபர் நேற்று (13) பிற்பகல் காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனா செல்ல முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரது பயணப் பொதிகளில் தேள்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில், சீனாவில் வீட்டு அலங்கார வளர்ப்பின் பொருட்டு தான் அதனை விற்பனை செய்வதற்கான நோக்கில் அவற்றை எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்ததாக, சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளரும் அத்தியட்சகருமான லால் வீரகோன் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தேள்களை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க சுங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதோடு, அபராதத்தை செலுத்தி தனது நாட்டிற்கு திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லால் வீரகோன் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 18 வகையான விஷ தேள்கள் காணப்படுவதோடு, அவற்றில் ஒன்று மனிதர்களுக்கு மிக ஆபத்தான வகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...