ராஜித சேனாரத்னவுக்கு டிச. 30 வரை விளக்கமறியல்

ராஜித சேனாரத்னவுக்கு டிச. 30 வரை விளக்கமறியல்-Rajitha Senaratne Remanded Till Dec 30

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னவுக்கு எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) பிற்பகல் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் நாராஹென்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட கொழும்பு மேலதிக நீதவான் இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்னாவிற்கு விதிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு அவர்களது வழக்கறிஞர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹென்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையான லங்கா ஹொஸ்பிட்டலில் நேற்று (26) இரவு 7.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இருதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (26) இரவு CID அதிகாரிகள் அங்கு விஜயம் செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று (27) காலை கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் CID யின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் அவர் முன்பிணை கோரியிருந்த நிலையில், சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை (24) நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.

அவர் குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்ததோடு, அது அடுத்தநாள் (20) விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே தினத்தில் முன்பிணை கோரி திருத்தங்களுடன் மனு தாக்கல் செய்ததோடு, அது கடந்த திங்கட்கிழமை (23) விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டதோடு, அது தொடர்பான மனுவை எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

அத்துடன் CID யின் கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வெளிநாடு செல்லவும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, கடந்த நவம்பர் 10ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற குறித்த சந்தேகநபர்கள் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி இரவு மஹர பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் தாங்களே குறித்த வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான சாரதிகள் என தெரிவித்திருந்ததோடு, தாம் இனங்காணப்பட்டால் தமக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து பொய்யான தாடியுடன் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரும் கடந்த டிசம்பர் 16ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த  இருவருக்கும் எதிர்வரும் ஜனவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...