பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் விடுவிப்பு (UPDATE)

துபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, சிறைச்சாலை அதிகாரி கோதாகொட ஆரச்சிகே லலித் குமாரவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த இருவரும், இன்று (27) காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததை அடுத்து, குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (PNB) விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமாலிடம் விசாரணை (9.54am)

பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமாலும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி) விசாரணக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நதீமால் பெரேரா (24) மற்றும் சிறைச்சாலை அதிகாரி கே. லலித் குமார (52) ஆகியோரை கைது செய்யவில்லை எனவும் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி இலங்கையிலிருந்து சென்றுள்ள இவ்விருவரும் மாகந்துரே மதுஷுடன், துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாடு கடத்தப்பட்ட இவ்விருவரும், விமான நிலையத்துக்கு இன்று (27) காலை வந்தபோதே, பொலிஸாரினால் இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் இருவரும்  Fly Dubai FZ 547 விமானத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர்.

துபாயிலுள்ள உல்லாச ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா, நதிமால் பெரேரா உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...