துரத்தப்பட்ட நான் மீண்டும் அதில் இணைவதா?

 

சுதந்திர கட்சியினால் துரத்தப்பட்ட நான் மீண்டும் அந்த கட்சியில் எவ்வாறு இணைவது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர். எம்.எச்.எம். நவவி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணையப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நவவி மேற் கூறியவாறு தெரிவித்தார். 

புத்தளம் தொகுதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அமைப்பாளர் இல்லாத போது, சுதந்திர கட்சி புத்தளம் தொகுதியில் வங்குரோத்து  அடைந்திருந்த நிலையில் புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

30 வருடங்களுக்கு மேலாக புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக உழைத்த நான், அந்த கட்சியை விட்டு துரத்தப்பட்டேன். இவ்வாறன நிலையில் நான் மீண்டும் சுதந்திர கட்சியில் இணையப் போவதாக பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. யாரும் இதை நம்பிவிட வேண்டாம்   என்று பாராளுமன்ற உறுப்பினர். எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நவவி,

1978களில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு காணப்பட்ட வாக்குகள் சுமார் 9,000 மாத்திரமே. அந்த வாக்குகளை 1994களாகும்  போது  35,000 ஆக அதிகரித்தேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்சிக்காக  கஷ்டப்பட்டேன் நஷ்டப்பட்டேன்.

சந்திரிகா, அநுர பண்டாரநாயக்க போன்றோர் கட்சியை விட்டு சென்ற போது கூட நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்னை கட்சியை விட்டு துரத்தியது, 

இவ்வாறன நிலையில்தான் தான் அமைச்சர் ரிஷாதின் அழைப்பு எனக்கு கிடைத்து. அவருடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். வெற்றி வாய்ப்பு இல்லாத போதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கு தரப்பட்டது.

புத்தளம் மக்களுக்காகவும் அமைச்சர் ரிஷாத்தின் மக்ககளை பாதுகாத்ததற்காகவும் இந்த எம்.பி. பதவி தரப்பட்டது. எனவே நான் மரணிக்கும் வரை எக்காரணம் கொண்டும் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரின்  கட்சியை விட்டு விலக மாட்டேன்.

என்னையும் புத்தளம் மக்களையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலர் எமக்கு அதிராக செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறனவர்களின் விஷ கருத்துக்களையும், எந்தவொரு பொது மகனும் நம்பி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று நவவி தெரிவித்தார். 

(புத்தளம் தினகரன் விசேட  நிருபர்)

 


Add new comment

Or log in with...