இந்தியாவின் பழமைமிகு பாரம்பரியமே யோகா

- அமெரிக்காவில் பிரதமர் மோடி

இந்தியாவின் மிகவும் பழமையான பாரம்பரியமே யோகா என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யோகா என்றால் ஒன்றுபடுவது என்பது தான் அர்த்தம். ஒன்று சேர்வதன் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு தான் யோகா. அதனால் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற இலக்கை நனவாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

சர்வதேச யோகா தினத்தின் பிரதான வைபவம்  நிவ்யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக வளாகப் புல்வெளியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 

இவ்வைபவத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதோடு,  இற்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஜுன் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்குமாறு நான் முன்வைத்த யோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இப்போது இத்தினத்தை உலகிலுள்ள எல்லா நாடுகளது மக்களும் அனுஷ்டிப்பதைப் பார்க்கும் போது எமக்கு பெருமையாக உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்நிகழ்வில் பங்குபற்றிய  நிவ்யோர்க் நகர மேயர் எரிக் அடெம்ஸ் ஏ.என்.ஐ. க்கு தெரிவிக்கையில், யோகா மூலம் நாம் கற்றுக்கொள்வதை வாழ்வில் செயற்படுத்த வேண்டும். அதுவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு கொண்டு வந்த செய்தி. அதனால் யோகாவை செயன்முறை பயிற்சியுடன் கற்பவர்களாக மாத்திரமல்லாமல் செயற்படுத்துபவர்களாகவும் நாம் மாற வேண்டும். அது மிகவும் முக்கியமானது என்றுள்ளார்.


Add new comment

Or log in with...