புகையிரத நிலைய அதிபர்கள் அடையாள வேலைநிறுத்தம்; பல்வேறு சேவைகள் இரத்து

புகையிரத நிலைய அதிபர்களின் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று காலை 5 அலுவலக புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இன்று (10) நள்ளிரவு வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

புகையிரத நிலைய அதிபரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நானுஓயில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த டிக்கிரி மெனிகே கடுகதி புகையிரதம் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை அதிகாலை 3.55 இற்கு இயக்கப்படவிருந்த அலுவலக புகையிரதமும் ஏனைய புகையிரதங்களும் தாமதத்துடன் இயங்குவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாலை 3.40 இற்கு அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வந்து சிலாபம் வரை செல்லும் புகையிரதம் இன்று நீர்கொழும்பு வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து நூர்நகர் வரை அதிகாலை 4.00 மணிக்கு இயக்கப்படும் புகையிரதம் சிலாபம் நிலையம் வரை மட்டுமே இயங்கியது.

மேலும், நூர்நகரில் இருந்து கோட்டைக்கு இயக்கப்பட வேண்டிய மந்தகதி புகையிரதம் இன்று சிலாபம் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.

கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி மு.ப. 7 மணிக்கு இயக்கப்படவிருந்த கடுகதி புகையிரதம் இன்று இயங்காது எனவும் இதன் காரணமாக காலை 9.00 மணிக்கு நீர்கொழும்பில் இருந்து கோட்டை நோக்கி செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கல்கிஸ்ஸை வரை அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படவிருந்த அதிவேக புகையிரதம் இன்று இயங்கவில்லை.

இதேவேளை, சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி மாலை 6.15 மணிக்கு இயக்கப்படவுள்ள புகையிரதம் இன்று கோட்டை வரையான அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கரையோரப் புகையிரத பாதையில் சிலாபத்தில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு வந்து, மருதானை நிலையத்தில் இருந்து மொரட்டுவை நோக்கி அதிகாலை 6.57 இற்கு புறப்படவிருந்த புகையிரதம் இன்று பாணந்துறை நிலையம் வரை பயணித்தது.

வழமையான நிறுத்தங்களுக்கு மேலதிகமாக தெஹிவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படும் என்றும், காலை 7.05 மணிக்கு மருதானையில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகாலை 5.50 மணிக்கு அளுத்கமவில் இருந்து காலி வரை இயக்கப்படும் மந்தகதி புகையிரதம் உள்ளிட்ட மேலும் சில புகையிரதங்கள் அரை மணித்தியாலங்களுக்கும் அதிகமாக தாமதமாக இங்கியமை குறிப்பிடத்கத்கது.


Add new comment

Or log in with...