வெளிநாடு தப்ப முயன்ற சந்தேகநபர் பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட்டம்

- தேரர்கள் போன்று வந்தவர்கள் உதவி
- கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் சார்ஜெண்டுக்கு விளக்கமறியல்

போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இந்நபர் நேற்றுமுன்தினம் (24) இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நபருக்கு எதிராக அவரது உண்மையான பெயரிலும் அவர் அடையாளப்படுத்தும் போலி பெயரிலும் இரண்டு வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நபர் தமது சேவை வழங்கும் பிரிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழு குடிவரவு திணைக்கள வளாகத்திற்கு வந்து அவரை கைது செய்து சிறைக் கூடத்தில் அடைத்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​தான் இலங்கை கடற்படையில் இருந்து தப்பியோடியவர் என்றும், நாடு முழுவதும் 9 கொலைகளை செய்துள்ளதாகவும், சமீபத்தில் ஹங்வெல்ல பகுதியில் நடந்த கொலையும் அதில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து, குறித்த நபரை அழைத்துச் செல்ல இரண்டு பௌத்த தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது சிறைக் கூடத்தில் இருந்த குறித்த சந்தேகநபர் அதிலிருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்திலிருந்து அந்நபர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த தேரர்கள் போலியான தேரர்கள் என மேலதிக விசாரணையில், தெரிய வந்துள்ளது.

அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், சார்ஜென்ட் ஒருவர் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று கட்டுநாயக்க நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜென்டுக்கு எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 2 கான்ஸ்டபிள்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...