இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக சந்திம வீரக்கொடி தெரிவு

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய  தலைவராக சந்திம வீரக்கொடி நேற்று (23) தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான நிர்வாக அங்கத்தவர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இக்கூட்டத்தில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை - ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய அவர்களும், உப தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல மற்றும் வேலு குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும், நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) நாலக கொடஹேவா மற்றும் உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை - ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவும் நல்லுறவை மேலும் மேம்படுத்தும் என இங்கு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இந்த நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...