மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 வருட சிறைத் தண்டனை

- எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு
- இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் அவரது கட்சி குற்றச்சாட்டு

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பான ஊழல் மற்றும் பணதூய்மையாக்கல் மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 11 வருட சிறைத் தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றம் நேற்று (25) தீர்ப்பளித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தேர்தலுக்கான மாலைதீவு எதிர்க்கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சி (PPM) வேட்பாளர் யமீன், மாலைதீவு குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாஃபுஷி (Maafushi) தீவில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் 1 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்ததற்காக 2019 இல் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா விடுதி மேம்பாட்டு அனுமதிப்பத்திர குத்தகை தொடர்பான மோசடி வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

தண்டனைக்குப் பிறகு யமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார் அதன் பின்னர் சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் சர்வாதிகாரி என அறியப்படும் மௌமூன் அப்துல் கையூமின் ஒன்றுவிட்ட சகோதரரான யமீன், மாலைதீவில் இந்திய செல்வாக்கிற்கு எதிரான பிரசாரத்துடன் தீவிர அரசியலுக்கு திரும்பினார். இது இந்தியாவுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்தது.

எதிர்த்து மேன்முறையீடு
இந்நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக  கூடிய விரைவில் யமீன் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியான 63 வயதான யமீன், எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறையில் உள்ள விசேட வளாகத்தில் தனது சிறைத்தண்டனையை அனுபவிக்கவுள்ளார். இது முன்னர் ஏனைய உயர்மட்ட அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க பயன்படுத்தப்பட்ட வளாகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

யமீனின் சட்டக் குழுவை வழிநடத்தும் மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி மொஹமட் ஜமீல் அஹமட், குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாமதமின்றி மேல்முறையீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் அதன் தீர்ப்பையோ அல்லது வழக்கு அறிக்கையையோ சமர்ப்பிக்காமல் குற்றவாளி என்ற தீர்ப்பை வழங்கியிருப்பது மிகவும் அபத்தமானது, என்று ஜெமீல் கூறியுள்ளார், பிரதிவாதி தரப்புக்கு இன்னும் முழுமையான எழுத்துபூர்வமான தீர்ப்பு வழங்கப்படவில்லை யெனவும் அவர குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு பிரதியின் தாமதம் காரணமாக, எமது அரசியலமைப்பின் 56ஆவது பிரிவின் கீழ் ஒரு அடிப்படை உரிமையான மேன்முறையீட்டை தாக்கல் செய்வதில் இருந்து சட்டம் முடங்கியுள்ளதால், ஏற்கனவே சட்டம் மீறல் நடந்துள்ளதே என்பதே எமது கவலையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை யமீனின் தண்டனைக்கு எதிராக PPM கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்ததோடு, இதில் 16 பேரை பொலிசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். கட்சி தனது போராட்டங்களைத் தொடரும் என்று அக்கட்சி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை மற்றும் தீர்ப்பு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான அரசியல் சூட்சி வேட்டை என நாம் மீண்டும் நம்புகிறோம். அவரை உடனடியாக மற்றும் நிபந்தனையற்ற விடுதலைக்கு அழைப்பு விடுக்கிறோம், என PPM கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019 இல் ஆட்சியை இழந்த யமீன், மீண்டும் 2023 தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 இல் மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்துல்லா யமீன், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமது சோலியிடம் தோல்விகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடலில் மூலோபாய கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள மாலைதீவானது, பிராந்தியத்தில் செல்வாக்கின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியின் மையப் புள்ளியாக கருதப்படுகின்றது.

யமீன் மீதான விசாரணையின் போது நீதித்துறை நடைமுறையில் இந்தியா நேரடியாக தலையிட்டதாகவும் PPM கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இக்கருத்து தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...