சிறுநீரக விற்பனை மோசடி; தரகராக செயற்பட்ட 41 வயது சந்தேகநபர் கைது

- வழங்கிய சிறுநீரகத்திற்கு பணம் கிடைக்கவில்லையென பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் முறைப்பாடு
- வைத்தியசாலையின் 6 பணிப்பாளர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை

பொரளை பிரதேச பிரபல வைத்தியசாலை ஒன்றில் இடம்பெறும் சிறுநீரக விற்பனை தொடர்பில் 41 வயதான கஜீமாவத்தையைச் சேர்ந்த தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமான முறையில் ஏமாற்றி பிரபல வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக தானம் செய்து அதற்காக  பணம் செலுத்தாமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட 05 பேர் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, நேற்று (05) மாலை, குறித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கொழும்பு 15, கஜிமாவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.

இந்த சந்தேகநபர் பணத்திற்காக சிறுநீரகத்தை கொடுப்பவருக்கும், பெற்றுக்கொள்ளும் தரப்பினருக்கும் இடையில் தரகராக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறுநீரகத்திற்காக தரகு பணத்திற்கு மேலதிகமாக , அதனை பெறும் தரப்பினர் சிறுநீரகத்தை வழங்கிய நபருக்கு வழங்கும் பணத்தில் ஒரு பகுதியையும் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்றையதினம் (06) புதுக்கடை இலக்கம் 02 இல் உள்ள நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) குறித்த குற்றம் தொடர்பான விடயங்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை CCD யினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...