ஓமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை; உள்நாட்டு தரகர் கைது

- நேற்று கைதானவருக்கு நவம்பர் 24 வரை விளக்கமறியல்

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக, மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) மாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை ஏமாற்றி மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், தொழில் முகவர்கள் மூலம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்த உப முகவர் (தரகர்) ஒருவரையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகி, மீண்டும் நாடு திரும்பியதையடுத்து பொலிஸாருக்கு மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்றையதினம் (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான பிரதான சந்தேகநபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

44 வயதுடைய குறித்த சந்கேதநபர் நேற்று (19) காலை நாநடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...