ஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு இந்திய துறைமுக அமைச்சர் விஜயம்

ஈரானின் சபஹரில் உள்ள ஷஹித் பெஹெஸ்டி துறைமுகத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களது முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக விஜயம் செய்த இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் சார் அமைப்பின் பிரதியமைச்சர் கலாநிதி அலி அக்பர் சஃபாஈ தலைமையிலான குழுவினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். 

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர், ஈரானுக்கு விஜயம் செய்ததோடு சபஹர் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டார்.  அத்தோடு இத்துறைமுகத்தின் செயற்றிறன்களை மேம்படுத்தும் வகையில் ஆறு மொபைல் பாரந்தூக்கிகளின் செயற்பாடுகளையும் அவர் தொடக்கி வைத்தார். இப்பாரந்தூக்கிகள் இந்தியன் போர்ட்ஸ் குளோபல் தனியார் நிறுவனத்திடம் சபஹர் சுதந்திர வர்த்தக வலயத்தில் வைத்து அமைச்சரினால் கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் பிரதியமைச்சரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அலி அக்பர் சஃபாஈ ஆகியோர் தலைமையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இப்பேச்சுவார்த்தையின் போது ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் மற்றும் துறைமுக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான முறையில் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

இச்சமயம் இந்திய மத்திய அமைச்சர், 'சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான தூரத்தையும் நேர கால விரயத்தையும் குறைப்பதற்கு சபஹர் துறைமுகம் பெரிதும் பங்களிக்க முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்துறைமுகத்தின் பணிகள் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவென கூட்டு தொழில்நுட்ப குழுவை அமைப்பதற்கும் இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

இங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய இந்திய மத்திய அமைச்சர், 'எங்களுக்கிடையிலான நீண்டகால வரலாற்று உறவு தான் வலுவான இருபக்க உறவுக்கு வித்திட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் நீடித்த ஈடுபாடு உள்ளிட்ட அனைத்து முன் முயற்சிகளும் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் சிறந்த தளத்தை அளித்துள்ளது. எமது பிரதமர் நரேந்திர மோடி 2016 இல் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அளித்த உறுதிப்பாட்டை நனவாக்கும் வகையில் சபஹர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா முழு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

மத்திய ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பான், கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளுடனும்  பிராந்திய வர்த்தக மேம்பாட்டையும் புதிய வர்த்தக வழிகளைத் திறந்துவிடவும் சபஹர் துறைமுகம் மூலோபாய ரீதியில் பாரிய பங்களிப்பை நல்கும்.

சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு விருப்பமான பாதையாக மாற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகிறோம்' என்றார்.

ஷஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் செயல்பாடுகளை இந்தியன் போர்ட்ஸ் குளோபல் தனியார் நிறுவனம்  ஏற்றுக்கொண்டது முதல் 4.8 மில்லியன் தொன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.


Add new comment

Or log in with...