ரூ. 5,000 கொடுப்பனவு முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு

ரூ. 5,000 கொடுப்பனவு முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு-Rs 5000 for Preschool Teachers-Mannar

- மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

அரச மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கம் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்திருந்தது.

அக்கடிதத்தில் கடந்த கடந்த 5 தொடக்கம் 25 வருடங்களுக்கு மேலாக தாங்கள் முன்பள்ளி ஆசிரியர்களாக சேவை நோக்கில்  பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பல தடவைகள் எங்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூ. 3,000 உம் பின் ரூ. 4,000 உம் தற்பொழுது இது ரூ. 6,000 உம் வழங்கப்பட்டு வருகின்றது.

எமது முன்பள்ளி ஆசிரியர்கள் பலர் பெண் தலைமைத்துவம் கொண்டவர்களாவர். அத்துடன் மிகவும் வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவராகவும் காணப்படுகின்றனர்.

எனவே இந்நிலமையை கருத்திற்கொண்டு தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மேலதிகக் கொடுப்பனவான ரூ. 5,000 இனை எமது மாதாந்த ஊக்கவிப்புக் கொடுப்பனவுடன் சேர்த்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க ஆவண செய்யுமாறு வேண்டியிருந்தனர்.

இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்துள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாது இருந்து வருவதால் மன்னார் மாவட்ட முன்பள்ளி அசிரியர்கள் சுமார் 350 பேர் நேற் (09) காலை மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து தற்பொழுது காலவரையின்றி தங்கள் பணியை பகிஷ்கரித்து வருகின்றனர்.

பாடசாலைகளுக்கு தற்பொழுது விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றபோதும் முன்பள்ளிகளை இவ்விடுமுறை நாட்களில் நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(தலைமன்னார் விசேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ)


Add new comment

Or log in with...